8.வெண்பா இலக்கணம்(அகன் )
.வெண்பா இலக்கணம் - 08.
🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀
உங்களால் எளிதாகக் #குறள்வெண்பா, #சிந்தியல்வெண்பாமற்றும் அளவியல் வெண்பாவில் #நேரிசைவெண்பா என மூன்றும் எழுத இயலும்.
அடுத்து, #இன்னிசை_வெண்பாவைப் பற்றி இன்றைய பாடத்தில் பார்க்கலாம்.
02. இன்னிசை_வெண்பா.
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
நேரிசை வெண்பாவுக்குரிய அனைத்து இலக்கணங்களும் #இன்னிசை_வெண்பாவுக்கும் பொருந்தும்.
நான்கு அடிகளால் ஆனது.
முதல் மூன்று அடிகள் நான்கு அசைகள் உள்ள அளவடிகளாகவும், நான்காம் அடி மூன்று அசைகள் உள்ள சிந்தடியாகவும் அமையும்.
இரண்டாவது அடியின் நான்காம் சீர் தனிச் சீராகி முதல் இரண்டடிகளின் முதற் சீர்களுக்கு எதுகை பெற்று வருவது #நேரிசை_வெண்பா என்று கண்டோம்.
#இன்னிசைவெண்பாவில்தனிச்சீர்வராது… #வராது… #வராது…
#முதல்இரண்டடிகளின்முதற்சீர்களுக்குஇரண்டாம்அடியின்நான்காம்சீர்எதுகைபெற்றும்வராது. அவசியமும் இல்லை.
#இரண்டாம்அடியின்நான்காம்சீரைக்கோடிட்டு ( -- ) #பிரித்துக்காட்டவும்வேண்டாம்.
நான்கு அடிகளின் முதல் சீர்கள் ஓரெதுகை(ஒரு விகற்பம்) பெற்று அமையின் அஃது ஒரு விகற்ப இன்னிசை வெண்பா எனப் படும்.
முதல் இரண்டடிகள் ஓரெதுகை(ஒரு விகற்பம்) பின்னிரண்டு அடிகள் ஓரெதுகை(ஒரு விகற்பம்) எனப் பெற்று அமையின் அஃது இரு விகற்ப இன்னிசை வெண்பா எனப் படும்.
#கூடுதலாகஇன்னிசைவெண்பாவில்பலவிகற்பஇன்னிசைவெண்பாவும்_உண்டு.
01. முதல் மூன்று அடிகளில் முதல் சீருக்கு மூன்றாம் சீர் மோனை(பொழிப்பு மோனை) பெற்று வர வேண்டும்.
02. ஈற்றடியான சிந்தடியில் மூன்றாம் சீர் நாள், மலர், காசு(நேர்பு) மற்றும் பிறப்புநிரைபு) இவற்றில் ஏதாவது ஒரு சீர் பெற்று முடிய வேண்டும்.
இந்த மூன்று வகை வெண்பாக்களிலும் மூவகை செப்பலோசைகளும் வரும்.
இனி, இன்னிசை வெண்பாக்களைப் பார்ப்போமா…
01. ஒரு விகற்ப இன்னிசை வெண்பா.
காவல் நிலையமா காலன் வளையமா
ஏவல் மிருகங்கள் எங்கும் வலம்வந்தால்
பாவம் பொதுமக்கள் பம்மிப் பயனென்ன
ஆவதொன் றேயெழுவாய் ஆர்த்து.
…............…- ‘’அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
மேற்காணும் ஒரு விகற்ப இன்னிசை வெண்பாவைக் #கூறாய்வு செய்து பார்ப்போமா…
எதுகை:
- - - - - - - -
காவ - ஏவ - பாவ - ஆவ என நான்கு அடிகளிலும் இரண்டாம் எழுத்து ‘’வ’’ ஒன்றி வர முதல் எழுத்துகள் ‘’கா - ஏ - பா - ஆ என நெடில் எழுத்துகள் ஆக எதுகை வந்திருக்கிறதா…
இன்னிசை வெண்பா என்பதால் இரண்டாம் அடியில் தனிச் சீர் இல்லை.
மோனை:
- - - - - - - - -
முதலடியில் கா - கா,
இரண்டாம் அடியில் ஏ - எ,
மூன்றாம் அடியில் பா - ப
பொழிப்பு மோனை வந்துள்ளது.
நான்காம் அடியிலும் முதல் சீருக்கு மூன்றாம் சீர் ஆ - ஆ மோனை வந்துள்ளது.
ஈற்றடியில் மோனை கட்டாயமில்லை. மோனை இருந்தால் சிறப்பு.
இனி, இந்த வெண்பாவில் என்ன சீர்கள் வந்திருக்கின்றன என்று பார்ப்போமா….
தேமா - கருவிளம் - தேமா - கருவிளம்
தேமா - புளிமாங்காய் - தேமா - புளிமாங்காய்
தேமா - புளிமாங்காய் - தேமா - புளிமாங்காய்
கூவிளம் - கூவிளங்காய் - காசு(நேர்பு)
தேமா, கருவிளம், கூவிளம், கூவிளங்காய், புளிமாங்காய் சீர்கள் மாறி மாறி வருகின்றன.
ஈற்றுச் சீர் காசு(நேர்பு) எனும் வாய்பாடு.
அனைத்துச் சீர்களுக்கும் இடையில் இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் கலந்து வருகின்றன.
ஆகவே, இஃது #ஒழுகிசைச்_செப்பலோசை வர யாக்கப் பட்ட ஒரு விகற்ப இன்னிசை வெண்பா ஆகும்.
02. இரு விகற்ப இன்னிசை வெண்பா.
நதிமுதல் ஆய்தல் நலம்பயக் காதே
புதியன போற்றல் புகழ்குறைக் காதே
இலக்கணம் மட்டும் இலக்கிய மென்றால்
உலகதை யேற்கா(து) ஒழி.
…............…- ‘’அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
மேற்காணும் இரு விகற்ப இன்னிசை வெண்பாவைக் #கூறாய்வு செய்து பார்ப்போமா…
எதுகை:
- - - - - - - -
முதல் இரண்டடிகளில் நதி - புதி என்று இரண்டாம் எழுத்துகள் ‘’தி’’ ஆகவும்(ஒரு விகற்பம்/எதுகை), முதல் எழுத்துகள் ந - பு குறில் எழுத்துகளாகவும்
பின்னிரண்டு அடிகளில் இல - உல என்று இரண்டாம் எழுத்துகள் ‘’ல’’ ஆகவும்(ஒரு விகற்பம்/எதுகை), முதல் எழுத்துகள் இ - உ குறில் எழுத்துகளாகவும்
இரண்டு விகற்பம்/எதுகை பெற்று வந்திருப்பதால் இந்த இன்னிசை வெண்பா இரு விகற்பம் ஆனது.
இன்னிசை வெண்பா என்பதால் இரண்டாம் அடியில் தனிச் சீர் இல்லை.
மோனை:
- - - - - - - - -
முதலடியில் ந - ந,
இரண்டாம் அடியில் பு - பு,
மூன்றாம் அடியில் இ - இ
பொழிப்பு மோனை வந்துள்ளது.
நான்காம் அடியிலும் முதல் சீருக்கு மூன்றாம் சீர் உ - ஒ மோனை வந்துள்ளது.
ஈற்றடியில் மோனை கட்டாயமில்லை. மோனை இருந்தால் சிறப்பு.
இனி, இந்த வெண்பாவில் என்ன சீர்கள் வந்திருக்கின்றன என்று பார்ப்போமா….
கருவிளம் - தேமா - கருவிளம் - தேமா
கருவிளம் - தேமா - கருவிளம் - தேமா
கருவிளம் - தேமா - கருவிளம் - தேமா
கருவிளம் - தேமா - நிரை(மலர்).
இயற்சீர்களான ஈரசைச் சீர்கள் தேமா, கருவிளம் சீர்கள் மாறி மாறி வருகின்றன.
ஈற்றுச் சீர் நிரை. #மலர் எனும் வாய்பாடு.
அனைத்துச் சீர்களுக்கும் இடையில் இயற்சீர் வெண்டளைகள் மட்டும் வருகின்றன.
ஆகவே, இஃது #தூங்கிசைச்_செப்பலோசை வர யாக்கப் பட்ட இரு விகற்ப இன்னிசை வெண்பா ஆகும்.
03. பல விகற்ப இன்னிசை வெண்பா.
நாவிருக்கும் காரணத்தை நாமறிந்து வாழ்வதினால்
நல்லவையே நம்மிடத்தை நாடிவரும் கொள்கையுடன்
காலமெலாம் பொய்யுரையாக் காந்திஹரிச் சந்திரனைப்
போற்றுவதும் ஏற்றுவதும் பொன்.
…............…- ‘’அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
மேற்காணும் பல விகற்ப இன்னிசை வெண்பாவைக் #கூறாய்வு செய்து பார்ப்போமா…
எதுகை:
- - - - - - - -
நான்கு அடிகளிலும் இரண்டாம் எழுத்துகள் ‘’வி - ல் - ல - ற்’’ ஒன்றி வரவில்லை. நான்கு அடிகளிலும் விகற்பம்/எதுகை இல்லை.
பல விகற்பம்/எதுகை பெற்று வந்திருப்பதால் இந்த இன்னிசை வெண்பா பல விகற்பம் ஆனது.
இன்னிசை வெண்பா என்பதால் இரண்டாம் அடியில் தனிச் சீர் இல்லை.
மோனை:
- - - - - - - - -
முதலடியில் நா - நா,
இரண்டாம் அடியில் ந - நா,
மூன்றாம் அடியில் கா - கா
பொழிப்பு மோனை வந்துள்ளது.
நான்காம் அடியிலும் முதல் சீருக்கு மூன்றாம் சீர் போ - பொ மோனை வந்துள்ளது.
பொதுவாகவே, ஈற்றடியில் மோனை கட்டாயமில்லை. மோனை இருந்தால் சிறப்பு என்று அறிவோம்.
பலவிகற்ப இன்னிசை வெண்பாவில் #எதுகைமோனைஇல்லாமலே_எழுதலாம்.
பொதுவாக, மரபுக் கவிதைக்கு அழகும், எழிலும் சேர்ப்பது எதுகையும் மோனையும் தான் என்பதால் இந்த வகை வெண்பாக்களை யாரும் ஆதரிப்பதில்லை.
இனி, இந்த வெண்பாவில் என்ன சீர்கள் வந்திருக்கின்றன என்று பார்ப்போமா….
கூவிளங்காய் - கூவிளங்காய் - கூவிளங்காய் - கூவிளங்காய்
கூவிளங்காய் - கூவிளங்காய் - கூவிளங்காய் - கூவிளங்காய்
கூவிளங்காய் - கூவிளங்காய் - கூவிளங்காய் - கூவிளங்காய்
கூவிளங்காய் - கூவிளங்காய் - நேர்(நாள்)
உரிச்சீர் மூவசைச் சீர்களில் ஒன்றான கூவிளங்காய்ச் சீர் வருகின்றது. ஈற்றுச் சீர் நேர். #நாள் எனும் வாய்பாடு.
அனைத்துச் சீர்களுக்கும் இடையில் வெண்சீர் வெண்டளைகள் மட்டும் வருகின்றன.
ஆகவே, இஃது #ஏந்திசைச்_செப்பலோசை வர யாக்கப் பட்ட பல விகற்ப இன்னிசை வெண்பா ஆகும்.
இனி, அளவியல் வெண்பாக்களில் இருக்கும் சில வகைப் பாக்களை உங்களுக்கு அடுத்தடுத்து அறிமுகப் படுத்தி வைக்க இருக்கிறேன்.

Comments
Post a Comment