7.வெண்பா இலக்கணம்(அகன் )



.வெண்பா இலக்கணம் - 07.

🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 

இதுவரை வெண்பா எழுதுவதற்கான இலக்கணத்தையும், குறள் வெண்பா மற்றும் சிந்தியல் வெண்பாக்களையும் அவற்றின் வகைகளையும் பார்த்தோம்.


இனி, #அளவியல்_வெண்பா பற்றியும் அவற்றின் வகைகளைப் பற்றியும் பார்க்கலாம்.


அளவியல் வெண்பா இரண்டு வகைப் படும். அவை,


01. நேரிசை வெண்பா மற்றும்

02. இன்னிசை வெண்பா ஆகும்.


01. நேரிசை வெண்பா.

- - - - - - - - - - - - - - - - - - - -

நான்கு அடிகளால் ஆனது.


முதல் மூன்று அடிகள் நான்கு அசைகள் உள்ள அளவடிகளாகவும், நான்காம் அடி மூன்று அசைகள் உள்ள சிந்தடியாகவும் அமையும்.


இரண்டாவது அடியின் நான்காம் சீர் தனிச் சீராகி முதல் இரண்டடிகளின் முதற் சீர்களுக்கு எதுகை பெற்று வர வேண்டும்.


நான்கு அடிகளின் முதல் சீர்கள் ஓரெதுகை(ஒரு விகற்பம்) பெற்று அமையின் அஃது ஒரு விகற்ப நேரிசை வெண்பா எனப் படும்.


முதல் இரண்டடிகள் ஓரெதுகை(ஒரு விகற்பம்) பின்னிரண்டு அடிகள் ஓரெதுகை(ஒரு விகற்பம்) எனப் பெற்று அமையின் அஃது இரு விகற்ப நேரிசை வெண்பா எனப் படும்.


இந்த இரண்டு வகை வெண்பாக்களிலும் மூவகை செப்பலோசைகளும் வரும்.


#பலவிகற்பநேரிசைவெண்பாஎன்றுஒன்றுகிடையாது.


#பலவிகற்பங்களுடன்அமையும்வெண்பாஇரண்டாம்அடியில்தனிச்சீர்பெற்று_வராது.


#அதுபலவிகற்பஇன்னிசைவெண்பா_ஆகும்.


நேரிசை வெண்பா மற்றும் இன்னிசை வெண்பாக்களைப் பார்ப்பதற்கு முன்னர் வெண்பாக்களில் தவிர்க்க வேண்டிய இரண்டு விதமான சீர்களைத் தெரிந்து கொள்வோம்.


01. இலக்கணத்தில் #நிரை அசை எனச் சொல்லப் பட்டாலும், குறில் நெடில் மற்றும் குறில் நெடில் ஒற்றுடன் வரும் சீரை #விளாஞ்சீர் என தற்காலத்தில் அழைக்கின்றனர்.


இந்த விளாஞ்சீர் கருவிளாங்காய்ச் சீராகவோ, கூவிளாங்காய்ச் சீராகவோ வெண்பாவில் வந்தால் பாவின் ஓசை நயம் குன்றும்.


சுருக்கமாகச் சொல்வதென்றால் வெண்பாக்களில் #மூவசைச்சீர்களானகாய்ச்சீரிடையில்வரும்விளாஞ்சீரைத்தவிர்ப்பது_சிறப்பு.


குறில் நெடில் நிரை அசை #ஈரசைச்_சீர்களில் வரலாம்.


உ - ம்:

- - - - - -

கொண்''டுவா''ராய், தூ''துபோ''வாய் - டுவா - துபோ போன்றவை.


அழ''கிலா''த, பழ''கினா''லும் - கிலா - கினா போன்றவை.


ஈரசைச் சீர்களில் புளிமா மற்றும் கூவிளம் சீர்களில் குறில் நெடில் அசை வரலாம்.


‘’வரா’’து, ‘கொடா’’தே, ‘’சிறா’ர்கள், ‘’விடா’’தீர், ‘’நடா’’தீர் போன்றவை - புளிமா.


ஆ’’வதே’’ - பா’’தகா’’ - நா’’வெழா’’ கா’’தலா’’ல் - மோ’’தலா’’ல் போன்றவை - கூவிளம்.


கருவிளம் சீரில் குறில் நெடில் ஏதேனும் ஒரு அசையில்(முன்போ பின்போ) தவிர்ப்பது சிறப்பு.


02. அடுத்தது, மூவசைச் சீர்களில் #நேரிசை மற்றும் நிரையசைச்_சீரானால் (தேமாங்காய் மற்றும் புளிமாங்காய்ச் சீர்)


கேட்டி ‘‘ட்ட’’, பார்த்தி‘‘ட்ட’’, சொல்லி‘‘ட்ட’’, வென்றி‘‘ட்ட’’ - தேமாங்காய்ச் சீர்கள்.


பகர்ந்தி‘‘ட்ட’’, நிறைந்தி‘‘ட்ட’’, மறந்தி‘‘ட்ட’’ புகழ்ந்தி‘‘ட்ட’’ - புளிமாங்காய்ச் சீர்கள்.


போன்ற  வினைச் சொல்லுடன் ‘‘ட்ட'' சேர்ந்த மூவசைச் சீர்களால் வெண்பாவின் சீரழகு கெடும். இவ்வாறான சீர்களைத் தவிர்ப்பது ஓசை நயம் சிறக்க உதவும்.


சரி, இனி அளவியல் வெண்பாவின் முதல் வகையான நேரிசை வெண்பாவைப் பார்ப்போம்.


01. நேரிசை வெண்பா.

- - - - - - - - - - - - - - - - - - - -

01. நான்கு சீர்கள் கொண்ட அளவடிகள் முதல் மூன்று அடிகளிலும், மூன்று சீர்கள் கொண்ட சிந்தடி ஈற்றடியாகவும் வரும்.


நான்கு அடிகளிலும் முதல் சீர் ஒரே எதுகை பெற்று வந்தால் ஒரு விகற்பம் என்பர்.


02. இரண்டாம் அடியில் நான்காம் சீர் தனிச் சீர் பெற்று முதல் இரண்டடிகளின் முதல் சீருக்கு ஒத்த எதுகை பெற்று வரும்.


.03. முதல் மூன்று அடிகளிலும் #பொழிப்பு_மோனை - முதல் சீருக்கு மூன்றாம் சீரின் முதல் எழுத்து ஒத்து - வர வேண்டும்.


04. ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பெற்று முடியும்.


இங்கே ஒரு விகற்ப நேரிசை வெண்பா ஒன்றைக் காண்போம்.


உ - ம்:

- - - - - -

#வெண்ணிலவு வானளக்கும் #மேகமெல்லாம் தூதனுப்பும்

#கண்ணழகு கொண்டவிளம் #காதலியே - #பண்ணிசைக்கும்

#வண்டுமலர் தேடிவர #வாசமலர் கூடிவர

#கண்டசுகம் சாட்சிசொல்லும் #காடு.


எதுகை:

- - - - - - - -

வெண் - கண் - வண் - கண். தனிச் சீர் பண் என ஐந்து இடங்களிலும் எதுகை வந்திருக்கிறதா…


மோனை:

- - - - - - - - -

முதலடியில் வெ - மே,

இரண்டாம் அடியில் க - கா,

மூன்றாம் அடியில் வ - வா

பொழிப்பு மோனை வந்துள்ளது.


நான்காம் அடியிலும் முதல் சீருக்கு மூன்றாம் சீர் க - கா மோனை வந்துள்ளது.


ஈற்றடியில் மோனை கட்டாயமில்லை. இருந்தால் சிறப்பு.


இனி, இந்த வெண்பாவில் என்ன சீர்கள் வந்திருக்கின்றன என்று பார்ப்போமா….


கூவிளங்காய் - கூவிளங்காய் - கூவிளங்காய் - கூவிளங்காய்

கூவிளங்காய் - கூவிளங்காய் - கூவிளங்காய் - கூவிளங்காய்

கூவிளங்காய் - கூவிளங்காய் - கூவிளங்காய் - கூவிளங்காய்

கூவிளங்காய் - கூவிளங்காய் - காசு(நேர்பு)


14 சீர்களும் கூவிளங்காய்ச் சீர்கள். ஈற்றுச் சீர் காசு(நேர்பு) எனும் வாய்பாடு.


அனைத்துச் சீர்களுக்கும் இடையில் வெண்சீர் வெண்டளை மட்டுமே வருகிறது. ஆகவே, இது #ஏந்திசைச்_செப்பலோசை வர யாக்கப் பட்ட நேரிசை வெண்பா.


அடுத்து, இரு விகற்ப நேரிசை வெண்பா ஒன்றைப் பார்ப்போமா…


முதல் இரண்டடிகளின் முதல் சீர் ஓர் எதுகையும் பின்னிரண்டு அடிகள் ஓர் எதுகையும் பெற்று வந்தால் அது இரு விகற்பமாகும்.


#பொறுப்பில்லா மக்கள் #பொழுதெல்லாம் சுற்ற

#மறுப்பில்லாப் பாதை #வரைய - சிறுபொறியாய்த்

#தொற்றும் கொரோனாதீ #சூழுலகைச் சீரழிக்க

#வற்றும் உயிர்க்கேது #மாற்று.


எதுகை:

- - - - - - - -

முதல் இரண்டாடிகளில் பொறு - மறு என்றும், இரண்டாம் அடியில் உள்ள நான்காம் சீர் - தனிச் சீர் - சிறு எனவும் மூன்று இடங்களில் எதுகை வந்திருக்கிறது.


பின்னிரண்டு அடிகளில் தொற் - வற் என எதுகை வந்துள்ளது.


மோனை:

- - - - - - - - -

முதலடியில் பொ - பொ

இரண்டாம் அடியில் ம - வ

மூன்றாம் அடியில் தொ - சூ

பொழிப்பு மோனை வந்துள்ளது.


நான்காம் அடியிலும் முதல் சீருக்கு மூன்றாம் சீர் ம - மா மோனை வந்துள்ளது. ஈற்றடியில் மோனை கட்டாயமில்லை. இருந்தால் சிறப்பு.


இந்த வெண்பாவில் என்ன சீர்கள் வந்திருக்கின்றன என்று பார்ப்போமா….


புளிமாங்காய் - தேமா - புளிமாங்காய் - தேமா

புளிமாங்காய் - தேமா - புளிமா - கருவிளங்காய்

தேமா - புளிமாங்காய் - கூவிளங்காய் - கூவிளங்காய்

தேமா - புளிமாங்காய் - காசு(நேர்பு)


காய்ச் சீரும் மாச் சீரும் கலந்து வந்திருப்பதால் இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் விரவி வரும் #ஒழுகிசைச்_செப்பலோசை உடைய இரு விகற்ப நேரிசை வெண்பாவாகும்.


ஈற்றுச் சீர் காசு(நேர்பு) எனும் வாய்பாடில் அமைந்துள்ளது.


இனி, குறள் வெண்பாவும், நேரிசை வெண்பாவும் உங்களால் எழுத இயலும் அல்லவா…


அடுத்து, இன்னிசை வெண்பாவைப் பற்றி அடுத்த பாடத்தில் பார்க்கலாம்.




Comments

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

1.எளியமுறை தமிழ் இலக்கணம்