6.வெண்பா இலக்கணம் (அகன் )



 

வெண்பா இலக்கணம்  - 06

🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 

எழுத்து, #அசை, #சீர், #தளை, #தொடை போன்றவறை முந்தைய பாடங்களில் பார்த்தோம்.

அத்தோடு, ஒரு குறள் வெண்பா எழுதுவதற்கான அனைத்து விதிமுறைகளையும் பார்த்தோம்.

அடுத்து, பாடத்துக்குள் போகும் முன் #வெண்பாவுக்கான_ஓசை என்னவென்று தெரிந்து கொள்வோம்.

வெண்பாவிற்கான ஓசை #செப்பலோசை.

#செப்பல் என்றால் வினாவிற்கு விடை கூறுதல் ஆகும்.

வினாவிற்கு விடை கூறுதல் போன்ற ஒசையமைப்பு கொண்டதால் இது செப்பலோசை எனப் பட்டது.

செப்பலோசை மூன்று வகைப் படும். அவை,

01.  #ஏந்திசைச்_செப்பலோசை.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

ஏந்திசைச் செப்பலோசை எனப் படுவது #வெண்சீர்_வெண்டளைகள் (#காய்_முன்_நேர்) மட்டுமே வர புனையும் வெண்பா ஆகும்.

எடுத்துக் காட்டு.

தேடாமல் வந்தவற்றின் தேவையறி யாதவர்கள்

ஆடாமல் ஆடுகின்றார் பார்.

தேமாங்காய்  - கூவிளங்காய் - கூவிளங்காய் - கூவிளங்காய்

தேமாங்காய் - கூவிளங்காய் - நாள்.

எல்லா சீர்களும் நேர் அசையில் தொடங்கி நேர் அசையில் முடிகின்றன.

வெண்பாவில், ''ஏந்திசைச் செப்பலோசை'' வர வேண்டுமென்றால், 

ஆறு சீர்களும் மூவசைச் சீர்களான #தேமாங்காய் மற்றும் #கூவிளங்காய்_சீர்களாக_மட்டுமே இருக்க வேண்டும். ஈரசைச் சீர்கள்(தேமா, புளிமா)  மற்றும் மற்ற இரண்டு மூவசைச் சீர்களான  புளிமாங்காய் மற்றும் கருவிளங்காய் வராது.

ஏழாவது ஈற்றுச் சீர்  நாள் அல்லது காசு(நேர்பு) எனும் வாய்பாடில் அமைய வேண்டும். இங்கு  நாள் எனும் வாய்பாடு வந்துள்ளது.

ஈற்றுச் சீர் ''மலர் மற்றும் பிறப்பு(நேர்பு)'' வாய்பாடில் #கண்டிப்பாக வராது.

அப்பொழுது தான்  காய் முன் நேர் வர அனைத்துத் தளைகளும் வெண்சீர் வெண்டளையாக  அமையும்.

இந்தக் குறள்  வெண்பாவில் வரும்  ஆறு தளைகளும்  வெண்சீர் வெண்டளைகள் தாம்.

02. #தூங்கிசைச்_செப்பலோசை.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

தூங்கிசைச் செப்பலோசை எனப் படுவது #இயற்சீர்_வெண்டளைகள் (மா முன் நிரை மற்றும் விளம் முன் நேர்) மட்டுமே வர புனையும் வெண்பா ஆகும்.

எடுத்துக் காட்டு.

கனவும் நினைவும் கணந்தொறும் மாறும்

கனவே நினைவின் களிப்பு.

புளிமா - புளிமா - கருவிளம் - தேமா

புளிமா - புளிமா - பிறப்பு(நிரைபு)

ஆறு சீர்களும் #ஈரசைச்_சீர்கள். மாச் சீர் இரண்டு(தேமா, புளிமா), விளஞ்சீர் இரண்டு(கூவிளம், கருவிளம்) மட்டுமே வர வேண்டும்.

மூவசைச் சீர்களான காய்ச் சீர்கள் வாரா.

ஏழாவது சீர் பிறப்பு(நிரைபு) எனும் வாய்பாடில் அமைந்துள்ளது. மலர் எனும் வாய்பாடிலும் அமையலாம்.

அப்பொழுது தான் மா முன் நிரை அல்லது விளம் முன் நேர் வர #இயற்சீர்_வெண்டளை_மட்டும் வரும்

இந்தக் குறள்  வெண்பாவில் வரும்  ஆறு தளைகளும்  இயற்சீர் வெண்டளைகள் தாம்.

03. #ஒழுகிசைச்_செப்பலோசை

 - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

ஒழுகிசைச் செப்பலோசை எனப் படுவது இரு வகை வெண்டளைகளும்(இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை) சேர்ந்து வர புனையும் வெண்பா ஆகும்.

எடுத்துக் காட்டு.

நல்லார் என்பவர் நன்னடத்தை கொண்டவர்

பொல்லா தவர்நடத்தை புண்.

தேமா - கூவிளம் - கூவிளங்காய் - கூவிளம் 

தேமா - கருவிளங்காய் - நாள்.

ஆறு சீர்களில்  நான்கு சீர்கள்  ஈரசைச் சீர்கள். இரண்டு சீர்கள் காய்ச் சீர்கள்.ஏழாவது சீர் நாள் எனும் வாய்பாடில் வந்துள்ளது. தளை தட்டாமல் இருந்தால்  ''மலர்'' சீரும் வரலாம்.

ஒழுகிசைச் செப்பலோசையில்  மூவசைச் சீர்கள் நான்கும்  தளை தட்டாமல் வரலாம்.

இந்தக் குறள்  வெண்பாவில் வரும்  ஆறு தளைகளும்  இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளைகள் எனக் கலந்து வருகின்றன.

01. ஏந்திசைச் செப்பலோசைக்கு மூவசைச்  சீர்களான  தேமாங்காய் மற்றும் கூவிளங்காய் மட்டுமே வர வேண்டும்.  வெண்சீர் வெண்டளை மட்டுமே வர வேண்டும்.

02. தூங்கிசைச் செப்பலோசைக்கு ஈரசைச்  சீர்கள் நான்கு மட்டுமே  வர வேண்டும். இயற்சீர் வெண்டளை மட்டுமே பயின்று வர வேண்டும்.

03. ஒழுகிசைச் செப்பலோசையில்  ஈரசைச் சீர்கள் நான்கும் மூவசைச் சீர்கள் நான்கும் வரலாம். இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை இரண்டும் கலந்து வரலாம்.  

சரி, இனி சிந்தியல் வெண்பா பற்றி காண்போம்.

02. #சிந்தியல்_வெண்பா

- - - - - - - - - - - - - - - - - - - - - -

#சிந்தடி_மூன்று_சீர்களால்_ஆனது.

#சிந்தியல்_வெண்பாவும்_மூன்று_அடிகளால்_ஆனது. நினைவில் வையுங்கள்.

#விகற்பம் என்றாலும் #எதுகை என்றாலும் ஒன்று தான்.

சிந்தியல் வெண்பாவின் முதல் இரண்டடிகள் நான்கு சீர்கள் கொண்ட அளவடியாகவும், ஈற்றடி மூன்று சீர்கள் கொண்ட சிந்தடியாகவும் அமையும்.

சிந்தடியின் ஈற்றுச் சீர் ஓரசைச் சீர்களான நாள், மலர், காசு(நேர்பு) மற்றும் பிறப்பு(நிரைபு) இவற்றில் ஏதேனும் ஒரு சீரைக் கொண்டு முடியும்.

குறள் வெண்பாவைப் போலவே சிந்தியல் வெண்பாவிலும் ஒரு விகற்பம், இரு விகற்பம் மற்றும் கூடுதலாக பலவிகற்பம் என்றும் மூன்று வகை உண்டு. அத்தோடு,

குறள் வெண்பாவில் இல்லாத இரண்டு வகை உண்டு. அவை,

01. நேரிசை சிந்தியல் வெண்பா மற்றும்

02. இன்னிசை சிந்தியல் வெண்பா ஆகும்.

01. நேரிசை சிந்தியல் வெண்பா 

நேரிசை சிந்தியல் வெண்பா(ஒரு விகற்பம்)

சிந்தியல் வெண்பாவில் முதல் இரண்டடிகள் ஒரு விகற்பம் பெற்று இரண்டாவது அடியின் #நான்காவது_சீர்_தனிச்_சீர்_ஆகி, #முதல்_இரண்டடிகளின்_விகற்பத்தைப்_பெற்று_வரும்.

உ - ம்:

- - - - - -

சிந்தியல் வெண்பாவின் சீரசைக் கற்றுணர்ந்து

தந்தனன் நீயும் தமிழ்ப்பாக்கள் - சொந்தமாய்ச்

சந்தமுடன் யாக்கலாம் சார்ந்து.

வெண்பாவின் மூன்று அடிகளிலும் தனிச் சொல்லிலும் ஒரே விகற்பம்(எதுகை) அமைந்திருப்பதைப் பாருங்கள். (சிந் - தந் -சொந் -சந்)

இஃது ஒரு விகற்ப நேரிசை சிந்தியல் வெண்பா ஆகும்.

நேரிசை சிந்தியல் வெண்பா(இரு விகற்பம்)

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

உ - ம்

- - - - - -

சிந்தியல் வெண்பாவின் சீரசைக் கற்றுணர்ந்து

தந்தனன் நீயும் தமிழ்ப்பாக்கள் - சொந்தமாய்ப்

பாரோர் புகழப் படை.

இந்தச் சிந்தியல் வெண்பாவைப் பாருங்கள்.

மூன்றாவது அடி வேறு விகற்பம்(பாரோர்) பெற்று வருகிறது.

இஃது இரு விகற்ப நேரிசை சிந்தியல் வெண்பா.

இந்த இரண்டு சிந்தியல் வெண்பாக்களின் சீர்களுக்கிடையில் வெண்டளை பிறழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

02. இன்னிசை சிந்தியல் வெண்பா.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

நேரிசை சிந்தியல் வெண்பாவுக்கு உரிய அதே இலக்கணம் தான்.

இன்னிசை சிந்தியல் வெண்பாவில் இரண்டாம் அடியில் தனிச் சீர் வராது.

இந்த வெண்பாவில் ஒரு விகற்பம், இரு விகற்பம் மற்றும் பல விகற்பம் என மூன்று வகை உண்டு.

ஒரு விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா.

உ - ம்:

- - - - - 

சிந்தியல் வெண்பாவின் சீரசைக் கற்றுணர்ந்து

தந்தனன் நீயும் தமிழ்ப்பாக்கள் ஆயிரமாய்ச்

சந்தமுடன் யாக்கலாம் சார்ந்து.

இந்த வெண்பாவில் மூன்று அடிகளிலும் ஒரே விகற்பம் வர இரண்டாவது சீரில் தனிச் சீர் இன்றி வருகிறது.

இஃது ஒரு விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா ஆகும்.

இரு விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா.

உ - ம்:

- - - - - -

சிந்தியல் வெண்பாவின் சீரசைக் கற்றுணர்ந்து

தந்தனன் நீயும் தமிழ்ப்பாக்கள் ஆயிரமாய்ப்

பாரோர் புகழப் படை.

இந்த வெண்பாவில் முதல் இரண்டடிகளில் ஒரு விகற்பமும் வர தனிச் சீரின்றி மூன்றாவது அடியில் வேறு விகற்பம் பெற்று வரிகிறது.

இஃது இரு விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா ஆகும்.

பல விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா.

உ - ம்

- - - - - -

சிந்தியல் வெண்பாவின் சீரசைக் கற்றுணர்ந்து

தேர்ந்தபின் நீயும் தமிழ்ப்பாக்கள் ஆயிரமாய்ப்

பாரோர் புகழப் படை.

இந்த வெண்பாவின் மூன்று அடிகளுமே வேறு வேறு விகற்பம் பெற்று வருகின்றன.

ஆகவே, இது பல விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா ஆகும்.

சுருக்கமாகச் சொன்னால், குறள் வெண்பாவின் இரண்டு அடிகளுக்கு இடையில் ஓர் அளவடியை நுழைக்க வருவது சிந்தியல் வெண்பா… புரிகிறதா….

அடுத்த பாடத்தில் #அளவியல்_வெண்பா மற்றும் அவற்றின் வகையைப் பற்றி பார்க்கலாம்.




           


Comments

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

1.எளியமுறை தமிழ் இலக்கணம்