ஹைக்கூ எழுதுவது எப்படி ? (சத்தார்)

 
ஹைக்கூ எழுதுவது எப்படி ?

 

#ஹைக்கூ_விதிகள்

"""''''"""""""""""""""""""""""""

"சும்மா ஒரு முழு வசனத்தை மூன்றாக உடைத்துப் போட்டால்

அதுதானே ஹைக்கூ..?" என்று ஒரு நண்பர் என்னிடம் ஏளனமாகக் கேட்டார். அவருக்கு நான் "ஆம் " என்று விடையளித்து அப் பேச்சை  அங்கேயே வெட்டி விட்டேன்.


அவரைப் போலத்தான் பலரும் நினைத்திருக்கிறார்கள் போலும். ஆனால் மற்றெந்தக் கவி  வடிவங்களுக்கும் இல்லாத வகையில் மிக அதிகமாக இலக்கண வரம்புகள் இருப்பது ஹைக்கூவுக்குத்தான்.


ஜப்பானிலிருந்து இவ்வடிவம் நேராகத் தமிழுக்கு வராமல் முதலில்  ஆங்கிலத்திற்குச் சென்று பின்னர்தான் தமிழுக்கு வந்தது. அந்த இடைவெளியில் சில காரணங்களுக்காக மிகச் சில விதிகள்  

மாற்றமடைந்திருப்பதை அறியக் கிடைக்கிறது. உதாரணமாக ஹொக்கூ வை (ஹைக்கூவின் முதற் பெயர்) உருவாக்கிய ஜப்பானியராகிய பாஷோ உவமை உருவகங்களை அவரது கவிதைகளில் பாவித்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. ஆனால் வட அமெரிக்காவில் குறிப்பாக ஆங்கிலத்தில் ஹைக்கூ என்பது சொந்தமாக கண்ணால் பார்த்த காட்சிகளால், அதுவும் இயற்கைக் காட்சிகளால் புனையப்பட வேண்டும் என்ற ஒரு பரவலான நம்பிக்கை உள்ளது. இது 19 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய உண்மையியல் சித்தாந்தங்களால் ஏற்பட்ட தாக்கத்தினால் உருவான நவீன ஹைக்கூ கோட்பாடு என்பதே உண்மை. அதுவே தமிழிலும் பின்பற்றப் படுகிறது.


(சிலர் பாஷோ போன்றோரின் கவிதைகளை ஒப்பிட்டுக் காட்டி கூப்பாடு போடுவதைக் கண்டிருப்பீர்கள்)


இலக்கணம் இல்லாத இலக்கியங்கள் நின்று  நிலைப்பதில்லை. சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஹைக்கூ இன்று நமது கைகளுக்கும் கிடைத்திருப்பதன் காரணம் அதன் வலுவான இலக்கண வரம்புகள்தான். எனவே நாம் ஆளாளுக்கு ஒன்றைப் பின்பற்றி அதனை உருக் குலைத்து விடாமல் காப்பதாயின் முடிந்த வரை அதன் விதிகளைக் கடைப்பிடிக்கவே வேண்டும்.  எனினும் எல்லாவற்றையும் இல்லாவிட்டாலும் முக்கியமான சில விதிகளையாவது கடைப்பிடித்து எழுதும் போதுதான் சிறந்த ஹைக்கூக்களை நம்மாலும்  படைக்க முடியும்.


இயன்றவரை ஹைக்கூவின் விதிகளைச் சேகரித்து அவற்றை இலகுவாக மனதிற் கொள்ளத் தக்க வகையில் ஹைக்கூ அமைப்பிலேயே கீழே தந்திருக்கிறேன். இவ் விதிகளில் சில  விடுபட்டிருக்கலாம் அல்லது  

மாற்றம் செய்யப்பட வேண்டியிருக்கலாம். அவற்றைச் சுட்டிக் காட்டினால் மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறேன்.


#ஹைக்கூ_விதிகள்

"""""""""""""""""""""""""""""""""

மூன்று வரிகள்

நடுவில் நீண்டு அழகாகும் 

ஹைக்கூ..!     01


சொல்லவரும் இரு அடிகள்

ஈற்றடி ஒரு திருப்பம்

ஹைக்கூ..!     02


இயற்கையைப் பாடும்

இயன்ற வரைக்கும்

ஹைக்கூ..!     03   


சொல்லும் விதம்

எளிமையாய் இருக்கும்

ஹைக்கூ..!     04                     


இறந்தகாலம் தவிர்த்து

காட்சிகளை நேரில் காட்டும்

ஹைக்கூ..!     05


விரியும் காட்சிகள்

அடுக்கி வைத்திருக்கும்

ஹைக்கூ..!     06


மொத்த வாசிப்பில்

முழு வசனம் வராது

ஹைக்கூ..!     07


இறுதிப் பெயர்ச்சொல்

ஈற்றடியால் உயிர்பெறும்

ஹைக்கூ..!     08


மூன்று வரிகள்

தொடர்பில் இருக்கும் 

ஹைக்கூ..!     09


சின்னச் சின்ன உயிர்கள்

சிறப்பித்துப் பாடும்

ஹைக்கூ..!     10


குறைந்த சொற்கள்

கொள்ளை அழகு தரும்

ஹைக்கூ..!     11


பாவித்த சொல்

மீண்டும் ஏற்க விரும்பாது

ஹைக்கூ..!     12


முதல் இரு வரிகள்

தனிச் சொல் தவிர்க்கும்

ஹைக்கூ..!     13


புரியா இருண்மை

ஏற்றுக் கொள்ளாது

ஹைக்கூ..!     14


ஏற்றம் மிகையின்றி

உள்ளதை உள்ளபடி சொல்லும்

ஹைக்கூ..!     15


சொல்லாமல் விடும்

சொல்வதைக் காட்டிலும்

ஹைக்கூ..!     16


இறுதி வரி

ஏமாற்றாது வியக்க வைக்கும் 

ஹைக்கூ..!     17


கவிஞனின் கற்பனை

ஏற்கவே ஏற்காது

ஹைக்கூ..!     18


தன்மைப் பாங்கு

தவிர்த்துக் கொள்ளும்

ஹைக்கூ..!     19


மலர்ந்த கருத்தொன்று

மற்றதை மறைத்து வைக்கும்

ஹைக்கூ..!     20


முதலிரு வரிகள்

தனிச்சொல் தவிர்க்கும்

ஹைக்கூ..!     21


சமூக சிந்தனை

தட்டிக் கொடுக்கும்

ஹைக்கூ..!     22


எதுகை மோனை

எதிர் பார்க்காது

ஹைக்கூ..!     23


உவமை உருவகம்

ஏற்கவே ஏற்காது

ஹைக்கூ..!     24


5-7-5  அசைகள் 

இருந்தால் நன்றாகும்

ஹைக்கூ..!     25


*ஹைக்கூ விதிகளை நன்கு கற்றுக்கொண்டு பின்னர் அவற்றை மறந்துவிடுக!


                                     -- பாஷோ


#ஹைக்கூ_விதிகள்

""""""""""""""""""""""""""""""""

         ( தொடர் - 01)


முனைவர் பட்டத்திற்காக  ஹைக்கூ கவிதைகளை ஆய்வு செய்த நிர்மலா சுரேஷ் அவர்கள் தமிழ் ஹைக்கூ க்களின் பல் வேறு விதிகளை இனங் காட்டியுள்ளார்கள். தற்போது அந்த விதிகளே ஹைக்கூ எழுதும் பெரும்பாலான கவிஞர்களால் பின்பற்றப் படுகின்றன. 


கவிதைகளில் மரபுக் கவிதையாகட்டும் , புதுக் கவிதையாகட்டும் அல்லது  பின் நவீனத்துவக் கவிதையாகட்டும்  ஏன் ஹைக்கூ கவிதையாகட்டும். எந்த வடிவமானாலும் அவற்றிற்கு ஒரு கட்டுக் கோப்பான இலக்கண விதிகள் இருந்தால்த்தான்  அவை காலா காலத்திற்கும் அழியாமல் நிலைத்து நிற்கும்.


திருக்குறள் இதற்கு வலுவானதொரு சான்றாகும். ஈரடிகளாயினும் சிறப்பான ஒழுங்கு விதிகளைக் கொண்டு அமைக்கப் பட்டிருப்பதால் கால காலமாக மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.


அதிலிருந்தும் ஓரடியை மேலதிகமாகக் கொண்ட - நம் எல்லோராலும் நேசிக்கப் படுகின்ற - ஹைக்கூ வடிவமானது அழியாது என்றும்  நிலைத்திருக்க வேண்டும் என்று நாம் விரும்பினால் உள்ள விதிகளைக் கடைப்பிடித்து அதன்படி எழுதுவதே உன்னதமான நிலைப்பாடாகும்.


அந்த வகையில் இத் தொடரில் முதலில் நாம் எடுத்துக் கொள்ளப் போகும்  முக்கிய விதியானது:


மூன்று அடிகள் - அதாவது மூன்று வரிகள். அதில் முதல் இரு அடிகள் ஒரு கூறாகவும் ஈற்றடியானது வாசகர் எதிர்பாராத ஒரு  திருப்பமாகவும் இருக்க வேண்டும் என்பதாகும்.


இதை விரித்துக் காட்ட நாம் ஒரு ஹைக்கூவை எடுத்துக் கொள்வோம்.


ஓடிவரும் நதி

கட்டி அணைத்துக் கொள்கிறது


"என்ன... நதி கட்டி அணைக்கிறதா? எப்படிய்யா? என்னையா உளர்ரீங்க...?"


அப்படியென்று கேட்கத் தோன்றுகிறதா? ஆம் அப்படித்தான் தோன்ற வேண்டும்.

வாசகரை இப்படி ஒரு மயக்கத்திற்கு ஆளாக்குவதே முதல் இரு அடிகளின் வேலையாகும்.


நன்கு கவனிக்குக! இங்கு சாத்தியமில்லாவிட்டாலும், பொருண் மயக்கம் இருந்தாலும் தமிழ் இலக்கணப்படி

முதல் அடியில் உள்ள நதி என்ற எழுவாய் ஆனது இரண்டாம் அடியில் உள்ள கட்டியணைக்கிறது என்ற பயனிலையில் முடிவுற்று இரு அடிகளும் ஒரு கூறாகி மேற்படி ஹைக்கூ விதிக்கு உட்படுகிறது.


இனி யாரும் எதிர் பாராத திருப்பமாக மூன்றாவது அடி 


கடல்


என வந்து அங்கே ஓடி வருகின்ற நதி எதையும் கட்டியணைக்கவில்லை. மாறாக அந்த நதியைத்தான் பாசத்தோடு கடல் அன்னை கட்டியணைத்துக் கொள்கிறாள் என்று கவிஞன் சொல்கிறான்.

இப்போது கவிதையை ஒன்றாகப் பார்ப்போம்.


ஓடிவரும் நதி

கட்டி அணைத்துக் கொள்கிறது

கடல்..!

                -- பைசர் சுல்தான்


இதே போன்று இன்னொரு கவிதையைச் சுருக்கமாகப் பார்ப்போம்.


நட்ட மரக் கன்றுகள்

நகர்ந்து செல்லத் தயங்குகின்றன


"யோவ் எப்படிய்யா  நட்ட மரக் கன்றுகள் நகரும்?"


இதை எழுதிய கவிஞரிடம் உண்மையில் இக் கேள்வி கேட்கப் பட்டது. ஆனாலும் மேற் சொன்னது போல சாத்தியமில்லாவிட்டாலும், பொருள் மயக்கமானாலும் மரக் கன்றுகள் ஆன எழுவாய் ஆனது தயங்குகின்றன எனும் பயனிலையில் முடிந்து முதல் இரு வரிகளும் ஒரு கூறாகி விதிக்கு உட்படுகின்றது.


இனி எதிர்பாராத திருப்பமாக வரும் மூன்றாமடியானது


வான் மழை மேகங்கள்


என வந்து "மரங்கள் நடுங்கள் மழை பெய்யும் என மக்கள் அடிக்கடி கூறுவார்களே! அதை நம்பி யாரோ ஒரு அப்பாவி இங்கு அதிகமான  மரக் கன்றுகளை நட்டு வைத்திருக்கிறானே... நாம் இவ்விடத்தில் ஒரு சின்னத் தூறலாவது போடாமல் எப்படி இங்கிருந்து  நகர்ந்து செல்வது?" என்று அந்த மேகங்கள் தயங்குவதாக கவிதையை அமைத்திருக்கிறான் கவிஞன்.


நட்ட மரங்கள்

நகர்ந்து செல்லத் தயங்குகின்றன

வான் மழை மேகங்கள்..!

                         -- முகம்மட் அஸாத்


இனி மேற்படி விதிக்குப் பொருந்தாத ஒரு கவிதையைப் பார்ப்போம்.


வங்கியில் கொள்ளை

உடைக்கப் பட்டிருக்கிறது

காவலாளியின் மண்டை..!


இங்கு 


வங்கியில் கொள்ளை

என்ற முதல் அடியானது மறைமுகமாக அவ்விடத்தில் முற்றுப்புள்ளி எடுக்கிறது.

ஏனெனில் முதல் அடியில் வரும்  கொள்ளை எனும் எழவாய் ஆனது  இரண்டாவது வரியில் எந்தப் பயனிலை கொண்டும்  முடிக்கப்படவில்லை. உடைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பயனிலையாக எடுக்கலாம் என்றால் கொள்ளை உடைத்தல் என்று யாரும் சொல்வதில்லை. மாறாக கொள்ளை அடித்தல் என்று சொல்லப்படுவதுண்டு. ஆகவே இரண்டாவது வரி அடிக்கப்பட்டிருக்கிறது என்று வந்திருந்தால் விதிக்கு உட்பட்டு முதல் இரு அடிகளும் ஒரு கூறென வந்திருக்கும்.


ஈற்றடி ஒரு திருப்பமாக வர வேண்டும் என்ற அடுத்த விதியையும் இக்கவிதை மீறுகின்றது. எப்படி?


உடைக்கப் பட்டிருக்கிறது

காவலாளியின் மண்டை.


என பின் இரு அடிகளும் இணைந்துதான் திருப்பத்தைக் கொண்டுவருகிறது.

இது நாம் கேள்விப் படாதது. என்றாலும் இப்படியும் புதிதாக ஒரு விதியை அமைக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

காரணம் எவ்வித விதிகளையும் கவனத்தில் கொள்ளாமல் சும்மா ஒரு முழு வசனத்தை மூன்றாகக் கிள்ளிப் போட்டு விட்டு ஹைக்கூ எழுதிவிட்டதாக இன்று  நினைக்கிறார்கள் பலர்.


ஹைக்கூ எழுத ஆசைப்படுவதோ எழுதுவதோ ஒன்றும் தப்புக் கிடையாது. அது அவரவர் உரிமை. மேலும் ஹைக்கூ என்பது தனிப்பட்ட யாருக்கும் சொந்தமும் கிடையாது.( சிலர் சொந்தம் கொண்டாடுகின்றனர் )

ஆனாலும் புதியவர்கள் அதை எழுதத் தொடங்கு முன் நிறையத் தேடிப் படித்து முடிந்தவரை விதிகளுக்கு உட்பட்டு எழுத வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


'சிறிய உயிர்களையும் சிறப்பித்துப் பாடும் ஹைக்கூ'


இது ஹைக்கூக்களின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். இந்த வகையில்  எறும்பு, கொசு/ நுளம்பு, ஈ , மண்புழு , நத்தை, வண்டு,  நண்டு, ஆமை, சிட்டுக்குருவி, மைனா, கொக்கு, அணில், கோழி, மீன்கொத்தி இன்னும் இது போன்ற எண்ணிலடங்கா உயிரினங்களை அடிக்கடி சிறப்பித்துப் பாடுவர் ஹைக்கூ கவிஞர்கள்.


இங்கு ஒரு ஹைக்கூவை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம்.


வரிசையில் காத்திருக்கின்றன வாகனங்கள் /

மஞ்சட்கோட்டை கடந்துகொண்டிருக்கின்றது /

ஒரு சிறு ஆமை...!!

                                     _ அஸாத்


என்ன...???  மஞ்சட் கோட்டில் ஆமை கடந்துசெல்வதா...? அதற்கு அது பாதுகாப்பான கடவை என்று தெரியுமா? இல்லை அது அங்கே தற்செயலாக வந்ததா...? அல்லது யாரும் இளசுகள் வேடிக்கை பார்ப்பதற்காக கொண்டுவந்து விட்டார்களா...?


எவ்வளவு முக்கியமான வீதியோ...? எவ்வளவு அகலமான வீதியோ...? அது கடந்து முடிவதற்கு எவ்வளவு நேரம் எடுக்குமோ...? எத்தனை வாகனங்கள் அங்கே காத்திருக்கின்றனவோ...? அவற்றில் பயணம்செய்பவர்கள் எத்தனை அவசரத்தில் இருக்கின்றனரோ? இது இடம்பெறுவது இரவிலா? பகலிலா?


முதலில் அதைக் கண்ட சாரதி கருணை மிக்கவராக இருக்கலாம். வீதி ஒழுங்கைப் பேணுபவராக இருக்கலாம். அல்லது போக்கு வரத்து police காரர் இதை அவ்விடம் நின்று  அவதானித்துக்கொண்டிருக்கலாம். அதற்காகப் பயந்து அங்கே வாகனச் சாரதிகள் பொறுமையோடு காத்திருக்கலாம். என்ன நடக்கிறது எனத் தெரியாமல் பின்னால் நிற்பவர்கள் horn அடித்துக்கொண்டேயிருக்கலாம் etc..etc.


 இவ்வாறெல்லாம் சிந்திக்கவைக்கிறது இந்த ஹைக்கூ. காரணம் அங்கே வீதியைக் கடந்துகொண்டிருப்பது ஒரு யானையல்ல. ஒரு அற்ப ஆமை. நானென்றால் மேலால் வாகனத்தை ஏற்றிக்கொண்டு சென்றுவிடுவேன் என்று நீங்கள் நினைக்கலாம்.


ஒரு மூன்று வரியில் இவ்வளவு உள்ளதா என்று நீங்கள் சிந்திக்கிறபோதுதான் ஹைக்கூ அதன் இலக்கை அடைகிறது.


ஹைக்கூவா? விடுகதையா?

"""""""""''"""""""""""""""""""""""""""""""""""


ஹைக்கூவை சில புதியவர்கள் தமிழில் உள்ள விடுகதை என தவறாக எண்ணிக்கொண்டு

அந்த அமைப்பில் அதிகமாக  எழுதிக்கொண்டிருக்கின்றனர்.


அவர்கள் தாங்களும் ஏமாந்து ஹைக்கூவை அறியாத பிறரையும் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர்.


எடுத்துக்காட்டாக இதைப் பாருங்கள்:


ஒன்றாக இருக்கும்

உரசினால் தீப்பிடிக்கும்

தீக்குச்சிகள்...!

                                  -- யாரோ


இதுவும் இது போன்று வருபவை யாவும் ஹைக்கூ உருவத்தில்  இருந்தாலும் விடுகதைகள் ஆகும். நிச்சயமாக இவை ஹைக்கூக்கள் அல்ல.


மேலே உள்ளவற்றில் இரண்டாவது வரியின் முடிவில் 


அது என்ன ?


என்று கேட்டுப் பாருங்கள்.


தீக்குச்சிகள் 


என்று வேறொருவர் பாய்ந்தடித்துக்கொண்டு விடை சொல்வார்.


அதாவது இப்படி:


ஒருவர் :  ஒன்றாக இருக்கும் 

                   உரசினால் தீப்பிடிக்கும்

                    அது என்ன..்?


மற்றவர் :  தீக்குச்சிகள்


இப்போது புரிந்திருக்கும். எனவே இவ்வாறு எழுதுபவர்கள் மட்டுமல்ல. வாசகர்களும் இதை அறிந்து  இனங்கண்டு தள்ளிவைக்க வேண்டும்.


ஹைக்கூ வயலில் விளையும் அநேக களைகளில் இதுவும் ஒரு வகையாகும். இதை விட்டுவைப்பது நல்லதல்ல. எனவே இதைப் பிடுங்கி எறிவது ஹைக்கூவை நேசிக்கும் அனைவரினதும் கடமையாகும்.


அதெல்லாம் சரி... அப்போ ஹைக்கூ எப்படி இருக்கும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஹைக்கூ இப்படி இருக்குமுங்க:


புகைந்துகொண்டிருக்கிறது

மரண வீட்டில்


மூன்றாவது வரியில் எல்லோரும்

சந்தனக்குச்சி யைத்தான் நினைப்பீர்கள். அதுதான் இல்லீங்க.


அங்கே...

சொத்து விவகாரம்

என்று போடுகிறார் கவிஞர்  இப்படி:


புகைந்துகொண்டிருக்கிறது

மரண வீட்டில்

சொத்து விவகாரம்...!

                                     


ஹைக்கூ எழுதுவது சிலருக்கு

கனிந்த வாழைப்பழம்  சாப்பிடுவது போல இலகுவாக இருந்தாலும்,  பலருக்கு முயற்கொம்பாகவே இருக்குதுங்க! காரணம் அதை எழுதத் தேவைப்படும் ஒரு முக்கியமான யுக்தி அவர்களுக்கு தெரியவில்லை. அதைத்தான் இந்த நான்காவது தெடரில் நான் போட்டு உடைக்கப்போகிறேன்.


அதற்கு முன்பாக வழமையாக எல்லோருக்கும் தெரிந்த விடயம்

ஹைக்கூ மொத்தம் மூன்றே மூன்று வரிகளை மட்டும் கொண்ட ஒரு சிறு கவி வடிவம். அதில் சந்தேகம் இருக்காது;  இருக்கவும் கூடாது. 


முதலில் சாதாரண இரண்டு வரிகள். அதைவாசித்துக்கொண்ட வாசகர்கள் அடுத்து வரும் மூன்றாவது வரியில் 


"ஓ...இன்னதுதான் சொல்லப்

போகிறார்" என்று  நினைக்கும்போது...


கவிஞரானவர், "இல்லையப்பா...

நான் சொல்ல வருவது வேறு"


எனும்படி எதிர்பாராத மீதி வரியைக் கொடுப்பார். இதுதான் அடிப்படை.


எடுத்துக்காட்டாக:-


ஜல்லிக்கட்டுத் தடை

தொடர்கிறது


இவை முதலிரு வரிகள்.


ஆமாம் தடை தொடர்வது 

உண்மைதான். பிறகு அந்த தடை பற்றித்தான் ஏதோ சொல்லப்

போகிறார் என எதிர்பார்க்கும் வாசகர்களுக்கு


இல்லையப்பா...


தொடருவது தடைசெய்யப்பட்ட அந்த விளையாட்டுத்தான். அதுவும் பரவலாக நடக்கிறது என்று இறுதி வரியை 

போடுகிறார் பாருங்கள்:


ஜல்லிக்கட்டு தடை

தொடர்கிறது

பரவலாக விளையாட்டு...!

                                                -- அஸாத்


"என்ன... இது சாதாரணமாக தெரிந்த விடயம்தானே"


அப்படியென்று நீங்கள் நினைப்பது எனக்குக் கேட்கிறது.

ஆனால் இதற்குள் கண்கட்டி வித்தை போன்று வார்த்தை ஜாலங்கள் இடம்பெறுவது தேர்ந்த ஹைக்கூ கவிஞர்களுக்கு மட்டுமே புரியும்.

இப்பொழுது அதைத்தான் நான்

உங்களுக்கும் புரியவைக்கப் போகிறேன். புரிந்துகொண்டால் இனி நீங்களும் ஒரு ஹைக்கூ கவிஞராகலாம்.


ஹைக்கூவில் இடையில் வரும் வசனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வழக்கம் கிடையாது. ஆனாலும் அதே முற்றுப்புள்ளியை வைத்தே நான் உங்களுக்கு இதை விளக்கப்போகிறேன்.


ஜல்லிக்கட்டு தடை

தொடர்கிறது.


உண்மையில் இவை இரண்டு வரிகளும் சேர்ந்து ஒரு முழு வசனம். ஆகவே இப்போது முற்றுப்புள்ளி எங்கிருக்கிறது என்று உற்றுப் பாருங்கள்.


( தொடர்கிறது என்ற சொல்லுக்குப் பின்னால் இருக்கிறது.)


இப்பொழுது மூன்றாம் வரி வந்த பிறகு முற்றுப்புள்ளி எங்கிருக்கிறது என்று உற்றுப் பாருங்கள்.


ஜல்லிக்கட்டு தடை .


தொடர்கிறது

பரவலாக விளையாட்டு


(முதலாம் வரி முடிவில் இருக்கிறது.  தடை எனும் சொல்லுக்குப்  பக்கத்தில் இருக்கிறது)


அதாவது முன்பு முதலிரு வரிகளும் ஒரு முழு வசனமாக இருந்தது. ஆனால் அந்த இரண்டாம் வரி அங்கிருந்து மெல்லக் கழன்று வந்து கீழ் வரியுடன் ஒட்டிக்கொண்டு முதலாம் வரிக்குத் துரோகமிழைத்துவிட்டது.


இப்பொழுது பின்னயது இரண்டும் இணைந்து ஒரு முழு வசனமாகி வாசகர்கள்  எதிர்பாராத பிறிதொரு விடயத்தைச் சொல்கிறது.


அதாவது முன்னர் இரு வரிகளும் இணைந்து தடை தொடருவதாகச் சொல்லிவிட்டு....


பின்னரான இரண்டு வரிகளும் இணைந்து விளையாட்டு தொடருவதாக சேதியை மாற்றிவிட்டது.


இதுதாங்க அந்த யுக்தி. புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன். புரிய வேண்டும்  என்று ஆசைப்படுகிறேன். புரிந்துகொண்டால் இனி நீங்களும் ஒரு ஹைக்கூ கவிஞர்தான். வாழ்த்துக்கள்.


இங்கே கற்றுக்கொண்டதை மனதில் கொண்டு பின் வரும் இரு ஹைக்கூக்களையும் வாசியுங்கள்.


காக்கைக் குஞ்சுகள்

வெள்ளையானது

எச்சமிட்ட இடம்...!

                                  -- சு. மணிரத்தினம்


வாகன நெரிசல் 

நீள்கிறது...

முதியவரின் கை...!

                                     -- ராஜன் ராஜ்


ஹைக்கூ நிகழ்காலத்தில் எழுதப்பட வேண்டும் என்பது அதன் முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகும். ஆனால் துரதிருஷ்டவசமாக பெரும்பாலான கவிஞர்கள் இதைப் பின்பற்றுவதில்லை.  காரணம் அறியாமை அல்லது அலட்சியம்.


பத்திரிகைச் செய்திகளைப் பாருங்கள். மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு முக்கிய புள்ளி இரகசியமாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுக்கொண்டிருப்பார். இன்றுதான் அது வெளியே கசிந்து பத்திரிகைக்காரர்களுக்கும் தெரிய வருகிறது என்றாலும் பத்திரிகைச் செய்தியானது இன்னார் மூன்று நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டிருந்தார் என இருக்கவே இருக்காது.  அதேவேளை பொய்யும் சொல்லாமல் 'இன்னார் கைது' என நிகழ்காலத்தில் சூடாக  செய்தி வெளியிடுவார்கள். ஏன்? அப்போதுதான் படிப்பவர்களுக்கு அதில் ஒரு சுவாரஷ்யம் இருக்கும்; பத்திரிகையும் பரபரப்பாக விற்பனையாகும்.


இது போலவே ஒரு ஹைக்கூ கவிஞனும் இருக்க வேண்டும். இயன்றவரை தற்போது நிகழும் காட்சிகளையே ஹைக்கூவில் தர வேண்டும். மட்டுமல்ல  எப்போதோ, பல வருடங்களுக்கு முன்பு - சிறு பராயத்தில் கூட - தான் கண்ட, கேட்ட விடயங்களாயினும் அதை 

இப்போதுதான்  காண்பது போல நிகழ்காலத்தில் மாற்றித் தர வேண்டும். அப்போதுதான் படிப்பவர்களுக்கு ரசனையாக இருப்பதோடு ஒருவிதமான  ஆனந்தத்தையும் தரும்!


இங்கே ஒரு கவிதையைப் பாருங்கள்:


மழைவிழுந்து அசையும்

பூவிலிருந்து திரும்புகிறது

ஒரு வண்ணத்துப்பூச்சி...!


                           -- இரா. தயாளன்


இது ஒரு அற்புதமான ஹைக்கூ! தனது வீட்டுக்குள் இருந்து ஒரு காலை வேளையில் ( பற்களைத் துலக்கியவாறு ) தனது தோட்டத்துப் பக்கம் நடந்து செல்லும் கவிஞன் மலர்ந்திருக்கும் ஒரு புதுவிதமான பூவின் அழகில் மெய் மறந்து ரசித்துக்கொண்டிருக்கிறான். திடீரென மழை பெய்ய ஆரம்பித்துவிடுகிறது. சற்று ஊன்றிப் பெய்யும் மழை பட்டு அந்தப் பூ அசைய, இதுவரை கவிஞனின் கண்ணுக்குப் புலப்படாமல் அதே பூவில் தேன் குடித்துக்கொண்டிருந்த - ஒருவேளை அதே நிறத்தைக் கொண்ட - வண்ணத்துப்பூச்சி அப் பூவிலிருந்து அதிர்ச்சியுடன்  திரும்புகிறது. அப்போதுதான் அதைக் கவனிக்கும் கவிஞன், "அடடா... இத்தனை நேரமும் இந்த வண்ணத்துப்பூச்சி தேன் குடித்ததை நாம்  அவதானிக்கவேயில்லையே"

என்று கை சேதப்படுகிறான். தனது video camera தன் கையில் இருந்திருந்தால் இதைக் காட்சிப்படுத்தியிருக்கலாமே என நினைத்தவன் சுதாகரித்துக்கொண்டு அதற்கென்ன என்று தனது மூன்று வரி ஹைக்கூ camera வில் படம்பிடித்து தான் ரசித்த அதே காட்சியை அப்படியே - அதே நிகழ்காலத்தில்- நமக்கும் ரசிக்கத் தருகிறான்! ( இப்போது நீங்கள் அந்தத் தோட்டத்திற்குள் போய் வந்தீர்களா இல்லையா? )


இதே கவிதையை இவ்வாறு எழுதினால்:


மழைவிழுந்து அசைந்த

பூவிலிருந்து திரும்பியது

ஒரு வண்ணத்துப்பூச்சி...!


இது முற்று முழுக்க இறந்தகாலத்தில் இருக்கிறது. இது எப்போது நிகழ்திருக்கும்...?

நேற்று...? அதற்கு முதல் நாள்...?

ஒரு வாரம், ஒரு மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு முன்பு...? தெரியாது. சிவாஜியின் படங்களில் வருவது போல இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு...? அதுவும் தெரியாது...! அப்போ...! பழங்காலத்து  விடயம்...! யாருக்குத் தேவை...?


என்ன...? இனி ஹைக்கூ எழுதுவதாயிருந்தால் இயன்றவரை நிகழ்காலத்தில் எழுத முயற்சிப்பீர்களா? ஜமாயுங்கள்! ஆனால் வேறு வழியில்லாமல் சில விடயங்கள் இறந்த காலத்தில்த்தான் எழுதியாக வேண்டியிருக்கும். பத்தில் ஒன்று அவ்வாறு இருந்தால் பரவாயில்லைங்க.


ஒரு கவிதை - அதுவும் ஹைக்கூ கவிதை ஒன்று மனதில் உதித்துவிட்டால் அதை கைபேசியில் அல்லது கணினியில் எழுதுவதற்கு அரை நிமிடம் அல்லது ஒரு நிமிடம்  போதுமானது. இனி அதைப் பதிவிட ஒரு நொடிப் பொழுது - அதாவது ஒரு தொடுகை போதுமானதாகும். இப்படித்தான் இப்போதெல்லாம் அநேகமாகச் செய்யப்படுகிறது.


அடுத்து நடப்பது என்ன? 


இதை அவ்வாறு எழுதப்பட்ட ஒரு கவிதையைக் கொண்டே பார்ப்போம்.


இடி இடிக்கிறது

மீன் வெட்டுகிறது

மழை பெய்யவில்லை


முதலில் ஒரு வாசகர் ஓடி வந்து, 

"ஐயா, மீன் வெட்டுகிறது அல்ல, மின் வெட்டுகிறது- எழுத்துப் பிழயைத் திருத்துக" எனச் சுட்டிக்காட்ட, நம்மாளு வெட்கப்பட்டுக் கொண்டே பிழயைத் திருத்துவார்.


சற்று நேரத்தில் இன்னொருத்தர் வந்து "ஏனுங்க, முதலில் மின்தானே வெட்டும்...!!!பிறகுதானே இடி இடிக்கும்...!!!

இங்கென்ன தலை கீழா? " யோசித்துப் பார்த்துவிட்டு நம்ம கவிஞர் எடிட் செய்து வரிகளை

மாற்றிப் போடுவார்.


இதுவரைக்கும் இரண்டு likes கிடைத்திருக்கும். அவையும் இவரைக் கவனிக்கச் சொல்லி இடப்பட்டது என்பதை அறிவாரோ தெரியாது.


இனிக் கிடைப்பது பாராட்டுத்தான் என எதிர்பார்த்திருக்கையில்  இன்னொருவர் வருவார். "ஐயா, ஹைக்கூ எனின் இறுதி வரி பெயர்ச்சொல்லில் முடிய வேண்டும். ஆகவே மழை பெய்யவில்லை என்பதை , பெய்யவில்லை மழை என மாற்றவும்" என்பார்

அட, ஆமா என்று மாற்றிவிட்டு

இப்போது கவிதையை அவதானித்து ரசித்து மகிழ்வார்.


மின் வெட்டுகிறது

இடி இடிக்கிறது

பெய்யவில்லை மழை...!


அந்த மகிழ்ச்சி நீடிப்பதற்கிடையில் இன்னொரு வாசகர் வந்து, "ஐயா, ஹைக்கூ எனின் முதல் இரு வசனங்களும் ஒரே நேரத்தில் முற்றக் கூடாது, ஆனால் தனி ஒன்று முற்றலாம். ஆகவே,


மின்னல் மின்னி

இடியும் இடிக்கிறது

பெய்யவில்லை மழை...!


எனப் போடுங்கள் " என்பார் வேறு சில சின்ன மாற்றங்களையும் சேர்த்துச் சொல்லி. வேறு வழியில்லை நம்மவர் அப்படியே செய்வார். கடைசியில் இவரின் எண்ணம் மட்டும் இருக்க வரிகளெல்லாம் வாசகர்களுடையதாக ஆகி ஓரளவு கவிதை போன்று காணப்படும். இவருக்கு இப்படி ஒன்று தேவையா?


"தேவையில்லை தான். சரி, அப்படியாயின் என்ன செய்ய வேண்டும்?" ஆ...இது கேள்வி.


கவிதை மனதில் உதித்தவுடன் அதை எங்கு எழுதினாலும் பரவாயில்லை. ஆனால் அவசரப்பட்டு உடன் பதிவு செய்யக் கூடாது. பத்திரமாக வைத்திருந்து நாமே திரும்பத் திரும்பப் படிக்கும் போது மேலே வாசகர்கள் தந்த அத்தனை ஐடியாக்களும் நமக்கே தோன்றும். எவ்வளவு நேரமானாலும் அல்லது எத்தனை நாட்கள்தான் கடந்து போனாலும் வைத்திருந்து ரசித்து ரசித்து நாமாகவே அந்த மாற்றங்களைச் செய்து செம்மையாக்கி தூய ஒரு  கவிதையான பிறகுதான் பதிவிட வேண்டும். இவ்வாறு செய்வதே ஒரு நல்ல கவிஞனுக்கு அழகு.


இலகுவாக 

ஹைக்கூ எழுதுவது எப்படி?

""""""""""""""""""""""""""""""""""""""""""""

ஹைக்கூ கவிதை நாளுக்கு நாள் புதுப் புது கவிஞர்களையும் ரசிகர்களையும் தன்பால் ஈர்த்தவண்ணமே இருப்பதை அனைவரும் கண்கூடாக கண்டு கொண்டிருக்கின்றோம். காரணம் 'கடுகு சிறிதானாலும் காரம் பெரிது' என்பதற் கொப்ப அது வாசிப்பவரின்  சிந்தனையைத் தூண்டி; ஒரு இனிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி; இனம் புரியாத ஒரு இன்பத்தைத் தந்து மயக்குவதேயாம். 


ஹைக்கூவின் அழகிலும் அதன் அளவிலும் ஈர்க்கப்பட்டு புதிதாக எழுத வருபவர்களுக்கு எதை எழுதுவது, எப்படி எழுதுவது எனத் தெரியாமல் கைக்கு வருவதெல்லாம் ஹைக்கூ என நினைத்து எழுதித் தள்ளுகிறார்கள். அவர்களுக்கு ஒரு வழி காட்டும் முகமாகவே வருகிறது இந்தப் பாடம்.


ஹைக்கூ மூன்று வரிகளில் இருக்க வேண்டும்; நடு வரி சற்று நீளம் (5-7-5); முதல் இரு வரிகளிலும் தனித்தனிச் சொல் வரக்கூடாது ;  இறுதிச் சொல் பெயர்ச்சொலாக இருக்க வேண்டும் போன்ற  இன்னோரன்ன விதிமுறைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். அவை அல்லாமல் ஹைக்கூ எழுதும் போது இப்படித்தான் தொடங்க வேண்டும், இப்படித்தான் முடிக்க வேண்டும் என்ற எந்த விதமான வரையறையும் கிடையாது. ஆனால் புதியவர்களுக்கு ஆரம்பத்தில் ஒரு இலகுவான வழிகாட்டும் முகமாகவே இது தரப்படுகிறது. எனவே ஏற்கனவே நன்றாக எழுதிக் கொண்டிருப்பவர்கள் இதைக் கண்டுகொள்ள வேண்டாம். மறுபடியும் சொல்கிறேன், இதுதான் முறை அல்ல, ஆனால் புதியர்கள் எழுத இது ஒரு எளிய முறை அவ்வளவுதான்.


இப்போது பாடத்தை ஆரம்பிப்போம். ஹைக்கூவின் முதல் வரியாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது ஏதாவது ஒரு பெயர்ச்சொல்.


பெயர்ச்சொல் என்றால் ஒரு மனிதனை/ ஒரு பொருளை/ஒரு இடத்தைக் குறிக்கும் சொல் அவ்வளவுதான். 


எடுத்துக் காட்டு

""""""'''''''"""""""""""""""

தொழிலாளி   ( மனிதன்)

சிலை               ( பொருள்)

காடு                  ( இடம் )


ஹைக்கூவின் முதல் வரியில் ஒற்றைச் சொல் வரக்கூடாது என்பதால் அப் பெயர்ச்சொல்லை விபரித்து வரக்கூடிய ஏதாவது ஒரு பெயரடைச் சொல்லை முன்னால் இட்டுக்கொள்வோம்.


எ. கா.                   ( / = அல்லது )

""""""""""

கூலித் தொழிலாளி/

பாடுபடும் தொழிலாளி/

சுத்திகரிப்புத் தொழிலாளி  etc.


தங்கச் சிலை/

புத்தர் சிலை/

திருட்டுப்போன சிலை  etc.


அடர்ந்த காடு/

சிறு காடு/

கரிசல் காடு  etc.


மேலும் சில:


உயர்ந்த மலை

கரையைத் தொடும் அலை

கூவும் குயில்

குளக்கரைக் கொக்கு

நகரும் மேகம்

பொழியும் பனி

குரைக்கும் நாய்

படிக்கின்ற பிள்ளை

சிறகடிக்கும் பட்டாம்பூச்சி

சிரிக்கும் பெண்

தேனுண்ணும் வண்டு

பரந்து விரிந்த கடல்


இப்படியாக எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இங்கே நாம் 


' உயர்ந்த மலை '  


என்பதை எடுத்துக்கொள்வோம்


இப்போது முதல் வரி தயார். 

இனி இரண்டாவது வரிக்கு வருவோம்.


மேலே உள்ள பெயர்ச்சொல்லை ஏதாவது ஒரு வினைச் சொல்லைக் கொண்டு முடித்துவிட வேண்டும்

அவ்வளவுதான்.


எடுத்துக் காட்டாக


'உயர்ந்த மலை' 

எனும் பெயர்ச்சொல்லை

'பறந்து வருகிறது' எனும் வினைச்சொல்லைக் கொண்டு முடிப்போம். இல்லை இல்லை... பறந்து வருகிறது என்பதை விட  'சுற்றி வருகிறது' என்று முடிப்போம்.

எப்படியும்  முடிக்கலாம். 


"என்னது...?  உயர்ந்த மலை சுற்றி வருகிறதா?  எப்படி ஐயா?  மலை எப்படிச் சுற்றி வரும்?  என்ன குழப்புகிறீர்...?"  என்றெல்லாம் நீங்கள் கேப்பது தெரிகிறது. இப்படித்தான் ஹைக்கூவில் வாசகனையும் யோசிக்க விட வேண்டும். அங்குதான் அதன் வெற்றியும் தங்கியிருக்கிறது.


இப்போது இரண்டாம் வரியும் தயார். எனினும் ' சுற்றி வருகிறது' என்பது சற்று நீளம் குறைவாக உள்ளது என்றபடியால் 


'சத்தத்துடன் சுற்றி வருகிறது'


என எடுத்துக்கொள்வோம்.

இப்போது இரண்டு வரிகளையும் ஒன்றாகப் பார்ப்போம்.


உயர்ந்த மலை

சத்தத்துடன் சுற்றி வருகிறது


( உண்மையில் இவை இரண்டு வரிகளும் இணைந்து ஒரு முழு வசனம் என்பதை ஊன்றிக் கவனிக்குக)


இனி யாருமே எதிர்பாராத, ஒரு திருப்பமாக வரக்கூடிய மேலும் 

ஆச்சரியத்தைத் தரும் ஈற்றடி ஒன்று வேண்டும். முக்கியமாக அது ஒரு பெயர்ச்சொல்லாகவும் இருக்க வேண்டும். 


மலையை சத்தத்துடன் சுற்றி வரக் கூடியது என்ன...? பருந்து..?

இல்லை அது சத்தம் போடாதே...!

சரி... ஆட்காட்டி என்று போடலாமா? இல்லை அது சத்தம் போடும் ஆனால் இரவில்த்தானே. அதனால் காட்சி தெளிவாக தெரியாது. ஹைக்கூவில் காட்சியை கண்ணுக்கு முன்னால் கொண்டு வரவேண்டும். 


ஆ...ஹெலிகாப்டர் என்று போடலாம் . அது நாம் சினிமாவிலும் சிலவேளைகளில் நேரடியாகவும் காணும் காட்சிதான். அது சரி ஹெலிகாப்டர் ஆங்கிலமாச்சே..

ஆமாம் அதனால் உலங்குவானூர்தி என்று போடுவோம்.


இப்போது ஒரு ஹைக்கூ தயார். அதை முழுவதும் பார்ப்போம்.


உயர்ந்த மலை

சத்தத்துடன் சுற்றி வருகிறது

உலங்குவானூர்தி..!


ஏன் மலையை உலங்குவானூர்தி சுற்றி வர வேண்டும்? அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். யாராவது அங்கு ஆபத்தில் மாட்டியிருக்கலாம் அல்லது ஆயுதங்களுடன் போராளிகள் பதுங்கியிருக்கலாம் அல்லது இவை போல வேறேதும் காரணம்  இருக்கலாம். 


என்ன நண்பர்களே, விடயத்தை கேச் பண்ணிவிட்டீர்களா? எங்கே பார்ப்போம். மேலுள்ள முதல் வரிகளைப் பாவித்து அல்லது புதிதாக நீங்களே உருவாக்கி இதை விட நல்ல ஹைக்கூக்களை படைத்துக்  காட்டுங்கள் பார்ப்போம்.


Comments